வானத்தில் இருந்து விண் கற்கள் விழுவதைப் பார்த்திருக்கிறோம் அல்லது கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், வைரக்கற்கள் விழுவதாக எவரும் பார்த்திருக்க மாட்டோம்; கேள்வியும் பட்டிருக்க மாட்டோம். ஆனால், மழை பெய்த பிறகு வானத்தில் இருந்து வைரக் கற்கள் விழுவதாக வதந்தி பரவிய நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சில பகுதி மக்கள் அதை நம்பி, அங்கு கூட்டமாய்ச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மழை பெய்த பின்னர் வைரக்கற்கள் கிடைப்பதாக வதந்தி வெளியாகி உள்ளது. அதாவது, துக்கலி மண்டல் தொகுதியில் உள்ள பாசினேபள்ளியில் விவசாயி ஒருவருக்கு தனது விளைநிலத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தபோது 30 காரட் வைரம் கிடைத்ததாகவும், அதனை அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வைர வியாபாரியிடம் ரூ.2 கோடிக்கு விற்று ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறி இருப்பதாகவும் தகவல்கள் மின்னல் வேகத்தில் பரவியிருக்கிறது. ஆனால், மக்கள் இப்படி நம்புவதற்கு பின்னாலும் ஒரு காரணம் இருக்கிறது. மிகப்பெரிய கதை இருக்கிறது.
ஏன்னா.. விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடிப்பது என்பது இதற்குமுன்பு கடந்த காலங்களில் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில், கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று மழைக்காலத்தின்போது வைரக் கற்களைக் கண்டெடுத்து அதை விற்பனை செய்திருப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இப்படி, ஆண்டுதோறும் மழைப் பருவத்தின்போது வைரம் கிடைப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் கிடைத்த ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரத்தை உள்ளூர் வணிகரிடம் நல்ல தொகைக்கு விற்பனை செய்துள்ளார். அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்னூல் மாவட்ட விவசாயிகள் 3 விலை உயர்ந்த வைரக் கற்களை கண்டுபிடித்து நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வதந்தியை, அதாவது வானில் இருந்து வைரக்கற்கள் விழுவதாக வரும் செய்தியை நம்பி, அப்பகுதி மக்கள் பலரும் வைரம் கிடைக்கும் என்ற ஆசையால் அங்குள்ள விவசாய நிலங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும், கர்னூல் மாவட்ட விவசாயிகள் அன்றாட வேலைகளை ஒதுக்கிவிட்டு இரவு பகலாக குடும்பத்தினருடன் வயல்வெளிகளில் காத்துக் கிடக்கின்றனர். அங்கு தற்காலிக கூடாரங்கள் அமைத்து வைரக்கற்கள் கிடைக்கும் எனக் காத்திருக்கின்றனர்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து அப்பகுதிகளுக்கு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நகரப்பகுதிகளில் இருக்கும் மக்கள்கூடப் படையெடுக்கின்றனர். இதற்காக அன்றாடம் வருமானம் தரும் வேலையைக்கூட விட்டுவிட்டு அங்கு தஞ்சமடைவதாகவும், இதற்காக ஜூன் மற்றும் செப்டம்பர் மாதம் வரை அங்கு தங்குவதற்காக தற்காலிக கூடாரங்கள் அமைத்து இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதிகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் வைரம் கிடைப்பதாக கூறப்படும் கிராமங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். உண்மையான செய்தியைவிட, வதந்தி எந்த அளவுக்கு வேகமாய்ப் பரவும் என்பதற்கு இந்த ஒரு சம்பவமே உதாரணம்.