இந்தியா

ஆந்திரா டூ பெங்களூரு: சொகுசு பேருந்தில் இருந்த ரூ.3.5 கோடி பணம், 1 கிலோ தங்கம் பறிமுதல்

kaleelrahman

ஆந்திராவில் இருந்து சொகுசு பேருந்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே ஆந்திர - தெலங்கானா மாநில எல்லையில் உள்ள பஞ்சலிங்க சோதனை சாவடி அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது சேத்தன் குமார் என்பவர் வைத்திருந்த ஒரு பையில் ரூ. 3 கோடியே 5 லட்சத்து 35 ஆயிரம் பணம் மற்றும் ஒரு கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். காவல் துறையினரின் விசாரணையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமானது என்றும், தங்க நகைகள் ஹைதராபாத் நகைக்கடைக்கு சொந்தமானது என்றும் பணத்தை எடுத்து சென்றவர் தெரிவித்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து இந்த பணம் உரிய முறையில் வரி செலுத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? அல்லது ஹவாலா பணமா அல்லது தங்க கடத்தல் கும்பல் பின்னணியில் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.