andhra x page
இந்தியா

ஆந்திரா | ONGC எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட எரிவாயு கசிவு.. பீதியில் வெளியேறிய மக்கள்!

ஆந்திரப் பிரதேசத்தில் ONGC எண்ணெய்க் கிணற்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் பீதிக்கு ஆளாகினர்.

Prakash J

ஆந்திரப் பிரதேசத்தில் ONGC எண்ணெய்க் கிணற்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து குடியிருப்புவாசிகள் பீதிக்கு ஆளாகினர்.

ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் மாலிகிபுரம் மண்டலத்தில் உள்ள இர்சுமண்டா கிராமத்தில் ஓ.என்.ஜி.சி.யின் உற்பத்தி ஒப்பந்ததாரரான டீப் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள எண்ணெய்க் கிணற்றில இன்று எரிவாயு கசிவு தீப்பிடித்ததை அடுத்து அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. முதற்கட்ட தகவல்களின்படி, கிணற்றில் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டு, தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் செயல்பாட்டின்போது, ​​கச்சா எண்ணெய்யுடன் கலந்த பெரிய அளவிலான எரிவாயு, அப்பகுதியில் வேகமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. எனினும், இதனால் அப்பகுதியில் உயிரிழப்போ அல்லது காயம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என்று நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கிராம மக்கள் கசிவு குறித்து ONGC அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்களையும் தவிர்க்கும் பொருட்டு, அருகிலுள்ள வீடுகளில் இருந்து மக்களை அதிகாரிகள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். எரிவாயு கசிவுக்கான சரியான காரணம் குறித்து விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, "அந்தப் பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ONGC நெருக்கடி மேலாண்மை குழுக்களை அணி திரட்டியுள்ளது. கிணற்றைக் கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால், கிணற்றை மூடவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன" என்று ONGC ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், அதன் மூத்த நிர்வாகமும் தொழில்நுட்ப வல்லுநர்களும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அது மேலும் தெரிவித்துள்ளது.