சுடுகாட்டில் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள தொழிலாளர்கள் அச்சப்பட்ட நிலையில், அவர்களின் அச்சத்தைப் போக்க தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ சுடுகாட்டில் கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் பாலகோல் தொகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு. அவரின் தொகுதியில் இருக்கும் சுடுகாட்டை புனரமைக்க அரசு மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. ஆனால் பேய், பிசாசு அச்சத்தில் இருந்த ஒப்பந்ததார்கள் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர் ஒருவர் முன்வந்தார். இந்நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை.
இந்நிலையில் ராம நாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வந்து அங்கேயே இரவு உணவை முடித்துக்கொண்டு அங்கேயே தூங்கினார். அவரது இந்த அதிரடி செயலின் பலனாக 50 தொழிலாளர்கள் வேலைக்கு வந்தனர். இதனால், மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு பயத்தை போக்கவே இரவு முழுவதும் மயானத்தில் தூங்கியதாக தெரிவித்தார். விரைவில் அனைத்து வசதிகளும் கொண்ட நவீன சுடுகாடாக இது மாற்றப்படும் என கூறிய அவர் கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என புகார் தெரிவித்துள்ளார்.