இந்தியா

டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கொன்ற கணவன்..!

டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மனைவியை கொன்ற கணவன்..!

webteam

டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்த மனைவியை, கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர பிரதேசம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்தாலா சின்ன நசரையா (27). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவர்தா. இவர் அடிக்கடி டிக்டாக் வீடியோ செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வேடிக்கையாக வைத்துள்ளார்.

இதை பிடிக்காத நசரையா, சுவர்தாவிடம் டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத சுவர்தா தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டு இருந்துள்ளார். இதனால் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, வீட்டை விட்டு வெளியேறிய சுவர்தா விடுதியில் தங்கியுள்ளார்.  

இதையடுத்து கடந்த நவம்பர் 14-ஆம் தேதி சுவர்தாவை வீட்டுக்கு வருமாறு நசரையா வலியுறுத்தியுள்ளார். ஆனால் அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நசரையா, தன் சகோதரர் உடன் சேர்ந்து சுவர்தாவை கையில் இருந்த துண்டை வைத்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சுவர்தாவின் உடலை பைக்கில் எடுத்துக் கொண்டு, பொட்லூரு கிராமத்தில் உள்ள இடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் கூறுகின்றனர். அவர் அணிந்திருந்த நகைகளை வைத்து காவல் துறையினர் அவரின் உடலை கண்டுபிடித்ததாகவும் பின்னர் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரனை செய்தபோது, இரவு 9:55 மணியளவில் நசரையா பெட்ரோல் வாங்கிய பதிவு இருந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர். 

இதைத்தொடர்ந்து ஐபிசி பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு நசரையாவையும் அவரது சகோதரர் வெங்கையாவையும் போலீசார் கைது செய்தனர்.