சந்திரபாபு நாயுடு கோப்புப் படம்
இந்தியா

ஆந்திரா | தனியார் நிறுவனங்களில் பணி நேரம்.. 10 மணி நேரமாக உயர்த்த அரசு அனுமதி?

தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 9 மணிநேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திரப் பிரதேச அரசு அனுமதிக்கவுள்ளது.

Prakash J

தனியார் நிறுவனங்களில் பணி நேரத்தை 9 மணிநேரத்திலிருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க ஆந்திரப் பிரதேச அரசு அனுமதிக்கவுள்ளது. இதன்மூலம் உணவு இடைவேளையுடன் சேர்த்து ஒருநாளைக்கு 12 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் இடைவேளை இல்லாத தொடர்ச்சியான வேலை நேரம் ஐந்து மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. 75 மணி நேரமாக இருந்த ஓவர் டைம் உச்ச வரம்பு 144 மணி நேரமாக உயர்த்தப்படவுள்ளது. பெண்கள் இரவு நேரப் பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். இவற்றை நடைமுறைப்படுத்த தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு ஏதுவான சுழலை உருவாக்குவதற்காக இதுபோன்ற சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசு கூறுகிறது.

சந்திரபாபு நாயுடு

இதுகுறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே.பரதசாரதி, "தொழில் செய்வதை எளிதாக்குதல் (EoDB) கொள்கையின் ஒரு பகுதியாக இந்தப் பிரிவுகளைத் திருத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. விதிகளைத் தளர்த்துவது அதிக முதலீடுகளை ஈர்க்க உதவும்" என தெரிவித்துள்ளார்.

ஆனால் இவை தொழிலாளர்களுக்கு விரோதமானவை என்று தொழிற்சங்கங்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. சிபிஎம் மாநிலச் செயலாளர் வி.ஸ்ரீனிவாச ராவ் இந்த நடவடிக்கையை கண்டித்து, அதை திரும்பப் பெறக் கோரியுள்ளார்.

அவர், "பெரிய தொழிலதிபர்களைத் திருப்திப்படுத்த விதிகளைத் திருத்த மத்திய அரசிடமிருந்து மாநிலம் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த திருத்தங்கள் தொழிலாளர்களை அடிமைகளாக்கும். தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை எதிர்த்து ஜூலை 9ஆம் தேதி நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்திற்கு தயாராகி வரும் நிலையில், ஆந்திர அரசு இந்த துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்துள்ளது” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.