இந்தியா

“அடுத்த மாதம் எனக்கு திருமணம் ”- சீனாவில் இருந்து அழைத்துச் செல்லும்படி இந்திய பெண் கோரிக்கை

“அடுத்த மாதம் எனக்கு திருமணம் ”- சீனாவில் இருந்து அழைத்துச் செல்லும்படி இந்திய பெண் கோரிக்கை

webteam

கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த சீனாவின் வுகான் மாகாணத்தில் சிக்கித் தவித்து வரும் இந்திய பெண் ஒருவர் தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவில் தவித்து வரும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மத்திய அரசு சிறப்பு விமானங்களை வுகான் மாகாணத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு தவித்து வந்த 647 இந்தியர்கள் ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். எனினும், அதிகப்படியான காய்ச்சல் காரணமாக 10 இந்தியர்கள் மட்டும் விமானத்தில் ஏற்றப்படவில்லை.

இந்நிலையில், அங்கேயே விடப்பட்டு வந்த 10 பேர்களில், ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த அன்னம் ஜோதி என்பவரும் ஒருவர். தமக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக தாய்நாடு திரும்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் தற்போது காய்ச்சல் குறைந்திருப்பதால் உடனடியாக மீட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களில், மருத்துவ பரிசோதனையின் முதற்கட்ட பட்டியல்படி 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.