சந்திரபாபு நாயுடு கோப்புப் படம்
இந்தியா

முதலீடுகளைக் கவர்வதில் வேகம் காட்டும் சந்திரபாபு நாயுடு.. கர்நாடகா அதிருப்தி!

ஆந்திர மாநிலத்திற்கு முதலீடுகளை குவிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிவேகத்தில் செயல்படும் நிலையில், அது அண்டை மாநிலங்களின் அதிருப்தியையும் சந்தித்துள்ளது.

PT WEB

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஏஎம்சிஏ, எல்சிஏ வகை விமான ஆலைகளை ஆந்திராவிற்கு மாற்ற சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார் என அண்மையில் செய்திகள் வெளியானது. இது குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவர் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த கர்நாடக அமைச்சர் எம்.பி.பாட்டீல், உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது கவலை தரும் செய்தி என்றார். தங்கள் மாநிலத்தில் விமான நிலைய ஆலையை அமைக்கவேண்டும் என அவர் கேட்கலாம்; ஆனால் இன்னொரு மாநிலத்தில் உள்ள ஆலையை தங்களுக்கு வேண்டும் என கேட்பது சரியாக இருக்காது என்றும் அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.

chandrababu naidu

இந்தியாவில் சோலார் பேனல்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள பிரிமியர் எனர்ஜிஸ் நிறுவனமும் தெலங்கானாவில் இருந்து ஆந்திராவிற்கு மாறுவதாக அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் அமையவிருந்த கியா மோட்டார்ஸ், எல்ஜி, கேரியர் போன்ற நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றி ஸ்ரீசிட்டிக்கு செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. கடந்த வாரம் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ், கேரியர், பிரிமியர் எனர்ஜிஸ் ஆகிய நிறுவனங்கள் ஆந்திர அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. முதலீடுகளை கவர்வதில் சிறப்பாக செயல்படும் நிபுணர்களை கூட வெளிமாநில அரசுகளில் இருந்து சந்திரபாபு நாயுடு தங்கள் மாநிலத்திற்கு வரவழைத்து பயன்படுத்திக்கொள்வதாகவும் தகவல்கள் உள்ளன. ஆந்திராவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதில் சந்திபாபு நாயுடு வேகம் காட்டி வருவதாகவும் குறிப்பாக சென்னையையும் பெங்களூருவையும் ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதியின் தொழில் வளர்ச்சிக்கு, அவர் பெரும் முக்கியத்துவம் தந்து வருவதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.