chandrababu naidu x page
இந்தியா

”வக்ஃப் வாரிய சொத்துகள் பாதுகாக்கப்படும்” - இப்தார் விருந்தில் பங்கேற்ற ஆந்திர முதல்வர் உறுதி!

”வக்ஃப் வாரிய சொத்துகளை தொடர்ந்து பாதுகாப்போம்” என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Prakash J

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாநிலத்திலும் இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். அந்த வகையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற இப்தார் விருந்தில் அம்மாநில முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு முஸ்லிம் மதத் தலைவர்களுடன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ”கடந்த 40 ஆண்டுகளாக நான் கலந்துகொள்ளும் இப்தார் கொண்டாட்டங்களில் பங்கேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ரமலான் ஒழுக்கம், தொண்டு மற்றும் ஆன்மீக பிரதிபலிப்பை குறிக்கும் ஒரு புனித மாதம். இந்த புனித மாதத்தில் கடுமையான நோன்பைக் கடைப்பிடிக்கும் எனது முஸ்லிம் சகோதரர்களின் பக்தியை நான் மிகவும் மதிக்கிறேன்.

chandrababu naidu

வறுமையில் உள்ள முஸ்லிம் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தெலுங்கு தேசம் எப்போதும் சமூகத்தின் வலுவான கூட்டாளியாக இருந்து வருகிறது. வக்ஃப் வாரிய சொத்துகளை தொடர்ந்து பாதுகாப்போம். தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் கணிசமாக பயனடைந்தனர். முஸ்லிம்களுக்கான நிதிக் கழகத்தை முதலில் நிறுவியவர் என்.டி.ராமராவ்தான். உருதுவை இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக்கினோம். ஹைதராபாத்தில் ஹஜ் இல்லத்தைக் கட்டினோம், வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்கப் பாடுபட்டோம். மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஹைதராபாத்திலும் கர்னூலிலும் இரண்டு உருது பல்கலைக்கழகங்களை நிறுவினோம். விஜயவாடாவில் ஹஜ் இல்லம் கட்டும் திட்டங்களை முந்தைய அரசு நிறுத்தியது. ஆனால் அதை நிஜமாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.