இந்தியா

நடுவழியில் ரயில் பெட்டியை விட்டு தனியே பிரிந்து சென்ற இன்ஜின்

webteam

ஆந்திரா நோக்கி சென்றுக் கொண்டிருந்த விசாகா விரைவு ரயிலின் இன்ஜின் நடுவழியில் திடீரென தனியாக‌ப் பிரிந்து 10 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் இருந்து ஆந்திராவின் செகந்திரபாத் வரை செல்லும் விசாகா விரைவு பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஆந்திர மாநிலம் நர்சிபட்டணம் மற்றும் துனி ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த ரயில் வந்தபோது, இன்ஜின் மட்டும் திடீரென தனியே பிரிந்து 10 கிலோ மீட்டர் வரை சென்றுள்ளது. 

இதனால், பின்னால் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள் நடு வழியிலேயே நின்றன. இது குறித்து பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் இன்ஜினை நிறுத்திய ஓட்டுநர், உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். ரயில் பெட்டிகளுடன் இணைக்கப்பட்ட இன்ஜின், ஓடும் வேகத்தில் எப்படி தனியே பிரிந்து சென்றது என்பது குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால், அந்த மார்க்கத்தில் சில மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.