இந்தியா

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறு பேச்சு - காவலர் கைது

JustinDurai

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து பொதுவெளியில் தரக்குறைவாக பேசிய காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் தன்னரு வெங்கடேஷ்வர்லு என்பவர், கடந்த ஜனவரி 1ஆம் தேதியன்று என்டிஆர் மாவட்டம் கவுரவரம் கிராமத்திற்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கிராமவாசி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த காவலர் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்தும், முதல்வரின் குடும்பத்தினர் குறித்தும் அவதூறாகப் பேசியதுடன், மாநில அரசுக்கு எதிராக தகாத சொற்களால் விமர்சித்து பேசியுள்ளார்.

காவலர் வெங்கடேஷ்வர்லு இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததை அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து காவல்துறை உயரதிகாரிளுக்கு அனுப்பி உள்ளார். அரசுப் பணியில் இருப்பவர்கள் அரசுக்கு எதிராக பேசுவது அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் காவலர் தன்னரு வெங்கடேஷ்வர்லு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து, காவலர் வெங்கடேஷ்வர்லுவை சிலாகல்லு போலீசார் கைது செய்தனர். அதன்பின் ஜக்கையாபேட்டையில் உள்ள கூடுதல் ஜுடிசியல் முதல் தர கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டு உள்ளது. விஜயவாடா நகர போலீஸ் ஆணையாளர் உத்தரவின்பேரில் காவலர் வெங்கடேஷ்வர்லு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். பொறுப்புள்ள பணியில் இருக்கும் ஒருவர் சமூகத்தில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்து உள்ளார்.