இந்தியா

திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்கக் கூடாது: ஆந்திர அரசு

webteam

திருமலை-திருப்பதி தேவஸ்தான சொத்துகளை விற்கக் கூடாது என ஆந்திர அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இதற்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. ஆந்திரா மட்டுமின்றி தமிழகத்திலும் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகள் ஏராளமாக உள்ளன. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 23 இடங்களில் உள்ள சொத்துகளை ஏலம் விட தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது.

இதற்கு ஆந்திராவில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. ஆந்திர மாநில எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல், பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பான செய்தி புதிய தலைமுறையில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டன. அப்போது, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துகளை விற்கக் கூடாது அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 50 இடங்களில் உள்ள சொத்துகளை விற்க கூடாது என்றும், பக்தர்களுக்கு உதவும் வகையில் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.