தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா கொனிடெலா, அதே திரையுலகில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார். இந்த நிலையில் சுஷ்மிதா கொனிடெலாவுக்கு ஆந்திர அரசு ஓர் உயர்ந்த பொறுப்பை வழங்கியுள்ளது. அவர், ஸ்ரீ கனக துர்கா (ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி) தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகரான சிரஞ்சீவியின் மூத்த மகள் சுஷ்மிதா கொனிடெலா, இவர் தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராகவும், 'கோல்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயங்கி வருகிறார். மேலும், ஆந்திரப் பிரதேச அரசில் கலை, சுற்றுலா மற்றும் திரைப்படத் துறை சார்ந்த ஆலோசனைகள் மற்றும் ஒருங்கிணைப்புப் பொறுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
சிரஞ்சீவியின் சகோதரரும், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மாநிலத்தின் திரைத்துறை மற்றும் சுற்றுலா மேம்பாட்டு நிகழ்வுகளில் சுஷ்மிதாவின் தொழில்முறை அனுபவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புகளை அதிகரிப்பது, திரையுலகக் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் அரசு சார்ந்த கலை நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
இந்த நிலையில், சுஷ்மிதா கொனிடெலாவுக்கு ஆந்திர அரசு ஓர் உயர்ந்த பொறுப்பை வழங்கியுள்ளது. விஜயவாடா இந்திரகீலாத்ரி மலையில் உள்ள ஸ்ரீ கனக துர்கா (ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர சுவாமி) தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவில் சிறப்பு அழைப்பாளராக சுஷ்மிதா கொனிடெலா நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர அரசு ஆன்மிகத் தலங்களை நிர்வாகிக்க அமைத்துள்ள புதிய தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கோயிலின் நிர்வாக மேம்பாடு, பக்தர்கள் வசதி மற்றும் ஆன்மிக நிகழ்வுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுவர். இதுகுறித்துப் பேசிய சுஷ்மிதா, “கனக துர்க்கை அம்மனின் சேவையில் மிகுந்த பக்தியுடனும் நேர்மையுடனும் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்திருப்பதுடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன்மூலம் சிரஞ்சீவியின் குடும்பம் அரசியல், சினிமா, ஆன்மிகம் உள்ளிட்டவற்றில் ஆந்திராவில் ஆதிக்கம் செலுத்திவருகிறது.