சந்திரபாபு, அதானி, ஜெகன்மோகன் எக்ஸ் தளம்
இந்தியா

அதானி விவகாரம்| ”நடவடிக்கை பாயும்..” - சந்திரபாபுவின் எச்சரிக்கைக்கு ஜெகன்மோகன் பதில்!

“அதானி விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என ஆந்திர அரசு தெரிவித்ததற்கு, ஜெகன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.

Prakash J

அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு!

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) பிரபல தொழிலதிபருமான கவுதம் அதானி லஞ்சம் கொடுக்க முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது. முறைகேடாகப் பெறப்பட்டதாக கூறப்படும் இந்த ஒப்பந்தத்தை முன்வைத்து, கடன் மற்றும் பத்திரங்கள் மூலம், அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அதானி குழுமம் திரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அதானியின் இந்தச் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக்கூறி நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கவுதம் அதானி தவிர அவர் உறவினர் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதே புகாரில் அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கவுதம் அதானி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதானி, அமெரிக்கா

அதானி பிரச்னையை கையில் எடுத்த ஆந்திர அரசு!

இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் மூத்த இந்திய வழக்கறிஞர்கள், அதானிக்கு எதிரான குற்றச்சாட்டு அறிக்கையில், லஞ்சம் யாருக்கு கொடுத்ததாக எந்த செய்திகளும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். என்றாலும் இந்திய அரசியலில், இது புயலை வீசியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில், ஆந்திராவிலும் இந்த விவகாரம் பற்றி எரிந்தது. இதுகுறித்து பேசிய ஆந்திர முதல்வர், ”இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளிவரவில்லை. இப்போது உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதால், இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. நாங்கள் நிலைமையை ஆய்வுசெய்து, என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.

அதானி விவகாரம்| ஜெகன் மோகன் ரெட்டி பதில்

இதற்கு முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பதிலளித்துள்ளார். அவர், “அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, ஆந்திர அரசில் பல திட்டங்களில் ஒப்பந்தமாகி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் தொழில்துறை தலைவர்களை சந்திப்பது அசாதாரணமானது அல்ல. நம்பிக்கை மற்றும் அதன் உறவை கட்டியெழுப்புவதற்காக இந்த சந்திப்புகள் நடைபெறுகின்றன. அதானி குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்சம் பற்றிய எந்த குறிப்புகளும் வரவில்லை. அரசியல் உள்நோக்கம் கொண்ட சில ஊடகங்கள் தமது பெயரைச் சேர்த்து வெளியிடுகின்றன. அவற்றின் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு, ஜெகன் மோகன்

கடந்தகால ஆட்சியில் நடந்தது என்ன?

முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், மின்சார கொள்முதல் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மாநில மின்வாரிய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வழக்கில் அப்போதைய உயர் அதிகாரி ஒருவருக்கே அதிகபட்ச லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு, அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பின்பே அப்போதைய ஆந்திர அரசு இந்திய சூரிய மின்சார நிறுவனத்திடம் இருந்து 7 ஜிகாவாட் மின்சாரம் வாங்க ஒப்புக்கொண்டதாகவும் குற்றச்சாட்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன், ஆந்திரப் பிரதேச அரசு மின்சார ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. இதையடுத்து 2021 ஆகஸ்ட் மாதம் ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் சந்தித்து, அதானி பணம் தொடர்பாக உறுதி அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தச் சந்திப்பு நடந்தபிறகுதான் ஆந்திரப் பிரதேச அரசு சுமார் 7 ஜிகாவாட் சூரிய சக்தியை வாங்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. வேறு எந்த மாநிலங்களும் இந்தத் தொகைக்கு வாங்காத நிலையில் ஆந்திரா வாங்க ஒப்புக்கொண்டதாலேயே இந்த விவகாரம் பேசுபொருளானது.