பாஸ்கர் ரெட்டி
பாஸ்கர் ரெட்டி PT
இந்தியா

கொலை வழக்கில் ஆந்திர முதல்வரின் உறவினர் கைது! சிபிஐ அதிரடி நடவடிக்கை! நடந்தது என்ன?

Rishan Vengai

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய் எஸ் விவேகானந்தர் ரெட்டி கடந்த பொது தேர்தலுக்கு முன் கடப்பா மாவட்டத்தில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான புலிவெந்தலாவில் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் ஆதாயத்திற்காக தெலுங்கு தேசம் கட்சியினர் ஆள் வைத்து, தங்கள் உறவினரை கொலை செய்துவிட்டனர் என்று ஜெகன்மோகன் ரெட்டி குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அதனை தொடர்ந்து இந்த படுகொலை சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பாஸ்கர் ரெட்டி

இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விவேகானந்த ரெட்டியின் மகள், தன்னுடைய தந்தை கொலை செய்யப்பட்டது பற்றி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விவேகானந்த ரெட்டியின் படுகொலை பற்றி சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இதுபற்றி வழக்கு பதிவு செய்த சிபிஐ கடந்த நான்காண்டுகளாக விசாரணை நடத்தி சிலரை கைது செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கடப்பா மாவட்டத்திலுள்ள ஒ.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் சொந்த ஊரான புலிவெந்தலாவிற்கு இன்று அதிகாலையில் சிபிஐ அதிகாரிகள் சென்றனர். கடப்பா பாராளுமன்ற உறுப்பினர் ஒய்.எஸ் அவிநாஷ் ரெட்டியின் தந்தை ஓய்.எஸ். பாஸ்கர் ரெட்டியை அதிரடியாக கைது செய்த சிபிஐ அதிகாரிகள் அவரை ஹைதராபாத்திற்கு அழைத்து சென்றனர்.

பாஸ்கர் ரெட்டி

இரண்டு நாட்களுக்கு முன் அவினாஷ் ரெட்டியின் நெருங்கிய நண்பராக இருந்த உதயகுமார் ரெட்டி என்பவரை, இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். உதயகுமார் ரெட்டியை கைது செய்துள்ள நிலையில், கொலை நடந்த அன்று உதயகுமார் ரெட்டி, சிவக்குமார் ரெட்டி, பாராளுமன்ற உறுப்பினர் அவிநாசி ரெட்டி, அவருடைய தந்தை பாஸ்கர் ரெட்டி ஆகியோர் தடயங்களை அழிக்க சதி திட்டம் தீட்டியதாக சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.