ஆந்திரா மாநிலம் நரசாபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நரசாபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு, முதல்வருக்கு அளித்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று பரபரப்பு கோரிக்கையை முன்வைத்தார். மேலும் அவர், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி மீது பல்வேறு ஊழல் புகார்களை தொடர்ந்து அடுக்கி வந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள இல்லத்தில் கிருஷ்ணம் ராஜூ அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது அரசுக்கு எதிரான துரோகம், சமூகத்தில் சில பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவித்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கிருஷ்ணம் ராஜூவின் பேச்சு அரசின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதாகவும் அரசுக்கு எதிராக கலவரத்தைத் தூண்டுவதாக உள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
கிருஷ்ணம் ராஜூ பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இருந்து விலகி தெலுங்குதேசம், பாஜக கட்சிகளில் பணியாற்றியவர் ஆவார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மீண்டும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸில் இணைந்து நரசாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.