இந்தியா

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமனம்

Veeramani

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்

மத்திய அரசிற்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை அளித்து வழிநடத்தும் மிக முக்கிய பதவியில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்பிரமணியன் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகியிருந்த நிலையில் அந்த இடத்திற்கு அனந்த நாகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பதவியேற்க உள்ள அனந்த நாகேஸ்வரன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி வகிப்பார். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வரும் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அனந்த நாகேஸ்வரனை தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவியில் நியமிக்கும் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அகமதாபாத் ஐஐஎம் முதுநிலை பட்டதாரியான அனந்த நாகேஸ்வரன் கிரடிட் சூஸ், ஜூலியஸ் பேர் போன்ற புகழ்பெற்ற சர்வதேச பொருளாதார அமைப்புகளிலும் முக்கிய பதவி வகித்துள்ளார். அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் நிதித்துறைக்கான டாக்டர் பட்டத்தையும் அனந்தநாகேஸ்வரன் பெற்றுள்ளார். உலகெங்கும் பொருளாதாரத்தின் போக்கை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர் என்ற பெருமையை பெற்றவர் அனந்த நாகேஸ்வரன்.

பொருளாதார நிபுணர், பேராசிரியர், புத்தக ஆசிரியர், ஆலோசகர் என பன்முகத்தன்மை கொண்ட 60 வயதான அனந்த நாகேஸ்வரன் மதுரையை பூர்விகமாக கொண்டவர் ஆவார். இதற்கு முன் தலைமை பொருளாதார ஆலோசகர்களாக இருந்த ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், கே.சுப்பிரமணியன் ஆகியோரும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது