மாற்றுத் திறனாளியான ஒருவருக்கு தொலைபேசி எந்தளவுக்குப் பயன்படும் சாதனமாக மாறியுள்ளது என்பது குறித்து விளக்கும் ஒரு வீடியோ பதிவை ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார்.
நாம் தொலைபேசியில் மூழ்கி இருப்பது குறித்து பல்வேறுவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள ஒரு வீடியோ, இந்தத் தொழில்நுட்ப சாதனங்கள் எவ்வளவு பயனுள்ளதாக உள்ளன என்பதை எடுத்துக்காட்டும்படி மாறியுள்ளது. மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, தனக்குப் பிடித்தமான வீடியோக்களை அடிக்கடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவருக்கு விருப்பமான வீடியோக்கள் எப்போது வைரல் ரகம் மட்டுமானவை இல்லை. அதில் ஒரு கருத்து பொதிந்திருக்கும் என்பது உண்மை.
அவர் சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோவில் ஒருவர் தொலைபேசியில் வீடியோ கால் மூலம் சைகை செய்து யாருக்கோ தகவல் தருகிறார். அவர் பேசும் திறன் குன்றிய மாற்றுத்திறனாளி. ஆகவே அவரால் பேச முடியாது. ஆனால் சைகை மொழியைப் பயன்படுத்தி தான் நினைப்பதை மற்றவருக்கு கடத்த முடியும். அதையே அவர் அந்த வீடியோ காட்சியில் செய்கிறார்.
வாகன நெரிசல் மிகுந்த சாலையில் யாரோ ஒருவர் நின்று எடுத்த வீடியோ பதிவு அது. அதைதான் இவர் வெளியிட்டுள்ளார். ஆனந்த அவரது பதிவில், “நாம் தொலைபேசியை சார்ந்திருப்பது குறித்து உலகம் முழுவதும் விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சாதனங்கள் நம்மில் பலருக்கும் ஒரு புதிய தகவல்தொடர்பு உலகை திறந்துவிட்டன என்பதை நாம் நினைவூட்டுவது நல்லது” என்று கூறியுள்ளார்.
இவரது வீடியோ பதிவு குறித்து நேர்மறையான ஒரு விவாதம் சமூக வலைத்தளங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.