குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் பாதுகாப்புப் படை அதிகாரியாக 26 வயதான சௌரப் தோமர் (Saurabh Tomar) என்ற ராணுவ வீரர் பணியாற்றி வருகிறார். இவர் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருந்தார்.
கடந்த நவம்பர் 8 இரவு, சௌரப் தோமர் தனது சகோதரர் வினீத் வீட்டின் வெளியே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சகோதரர்களான தீரஜ் மற்றும் மோனு என்ற இரு சகோதரர்கள் வந்து பட்டாசு வெடிப்பதற்குக் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மூன்று பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தீரஜ் என்பவர், தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மிரட்டல் விடுக்கும் வகையில் சுவரை பார்த்து சுட்டுள்ளார். ஆனால் இந்த தோட்டா சுவரில் பட்டு தெறித்து ராணுவ வீரான சௌரப் தோமரின் தலையை துளைத்து உள்ளே பாய்ந்துள்ளது.
இதில் படுகாயமடைந்து சௌரப் தோமர் சரிந்த நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுத் தோட்டா அகற்றப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள தீரஜ் மற்றும் மோனு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். குடியரசுத் தலைவரின் பாதுகாவலர் ஒருவரே துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்துள்ளது இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.