டொமினிக் குடியரசு காவல்துறையால் கைது செய்யப்பட்ட இந்தியாவால் தேடப்படும் நபரான மெகுல் சோக்சி, காவலில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இவர் கைது செய்யப்பட்ட பின்னணியில் பல்கேரிய பெண் இருக்கிறார் என்கிற புது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து தப்பிய மெஹூல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா - பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தார். இந்த நிலையில், அங்கிருந்து திடீரென தலைமறைவான மெஹூல் சோக்சி டோமினிகாவில் சிக்கினார். அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. கடந்த சில நாள்களாக மெஹூல் சோக்சியை இந்தியாவுக்கு திருப்பியனுப்ப ஆன்டிகுவா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவுக்கு திரும்ப எதிர்ப்பு தெரிவித்து மெஹூல் சோக்சி சார்பில் நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மெஹூல் சோக்சியை இந்தியா கொண்டு வருவதற்கு விமானங்கள் மூலம் ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து டோமினிகா போலீஸ் காவலில் இருந்து வெளியே வந்த மெஹூல் சோக்சிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் டோமினிகா நாட்டில் இருக்கும் 'சைனா பிரண்ட்ஷிப்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை மெஹூல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே விஜய் அகர்வால் சோக்சி பிடிபட்ட பின்னணியில் ஒரு பெண் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "குற்றம்சாட்டப்பட்ட மெஹூல் சோக்சி குற்றவாளி அல்ல. சோக்சி ட்ராப் செய்யப்பட்டு பிடிக்கப்பட்டுள்ளார். ஆன்டிகுவான் ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட பல்கேரியாவைச் சேர்ந்த பார்பரா ஜராபிகா என ஒரு பெண் இதன் பின்னணியில் இருக்கிறார் என சந்தேகிக்கிறோம். அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களாக சோக்ஸியை சந்தித்து வந்தார்.
காலை வாக்கிங் செல்லும்போது சோக்சியுடன் நட்பாக பழக தொடங்கியிருக்கிறார் அந்தப் பெண். அவரே சோக்சி டோமினிகாவுக்குச் செல்ல காரணமாக இருந்துள்ளார். அதற்கேற்ப இந்திய அதிகாரிகள் டோமினிகாவில் இருந்தபோது, சோக்சியின் கண்ணிலும், கையிலும் ரத்தக்காயங்கள் இருப்பது போன்ற படங்கள் கரீபியன் ஊடகங்களில் இருந்தன. கரீபியன் கடற்கரையில் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பார்பரா ஜராபிகா இடம்பெற்றுள்ளதும் தெளிவாகியுள்ளது.
இதேபோல், சோக்சி டோமினிகாவை அடைந்ததாகக் கூறப்படும் படகின் படங்களில் மேலும் இருவர் இருந்துள்ளனர். அவர்கள் குர்ஜித் பண்டால் மற்றும் குர்மித் சிங் என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் பிரிட்டிஷ் மற்றும் இந்திய குடிமக்களாக இருப்பவர்கள். அதேநேரம், சோக்சி தப்பித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அப்படிச் சென்றால், அவர் சென்ற படகில் மற்றவர்கள் காண்பிக்கப்படும் பட்சத்தில் சோக்சி மட்டும் இடம்பெறவில்லை எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதனால் அவர் கடத்தப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இதேபோல் சோக்சியின் மனைவி ப்ரீத்தி, "புனரமைப்புத் துறையைச் சேர்ந்தவர் எனக் கூறும் பார்பரா என்ற பெண் ஆன்டிகுவாவுக்குச் சென்று சோக்சியை வழக்கமாகச் சந்திப்பார். மே 23 மாலை, பார்பரா சோக்சியை ஆன்டிகுவாவில் உள்ள ஜாலி ஹார்பருக்கு அழைத்து, ஒரு அபார்ட்மென்டிற்கு வரும்படி கேட்டுள்ளார். அதன்படி, அங்கே சென்று உள்ளே நுழையும்போது இரண்டு பக்கங்களிலிருந்தும் வந்த 8 முதல் 10 பேர் சோக்சியை கண்மூடித்தனமாக இரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர். அவர்கள் அவரை சக்கர நாற்காலியில் கட்டி, ஒரு பிளாஸ்டிக் பை வைத்து கட்டியுள்ளனர். இதெல்லாம் முடிந்த பின்பு அவரை டோமினிகா கடத்திச் சென்றுள்ளார்கள். இதற்கு அடுத்த நாள் பார்பரா ஆன்டிகுவாவிலிருந்து காணாமல் போனார்.
தற்போது இருக்கும் நிலையில் என் கணவரை இவர்கள் கடத்த என்ன தேவை இருக்கிறது. இது முழுக்க முழுக்க இந்திய அமைப்புகளின் வேலை. படகில் சோக்சி உடன் வந்தவர்கள் குர்மித் மற்றும் குர்ஜித் ஆவார்கள். இந்த இருவரும் என் கணவரை நரேந்திர சிங் என்ற நபரிடம் தொலைபேசியில் பேச வைத்தார்கள். இந்த நரேந்திர சிங்தான் என் கணவரின் வழக்கை வழிநடத்தி வருபவர். இதை குர்மித் மற்றும் குர்ஜித் என்பவர்கள் தான் சொல்லியுள்ளனர். இந்த நரேந்திர சிங் எனது கணவரிடம் ஜாலி துறைமுகத்தில் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும், பார்பரா பெயரை வெளிப்படுத்த வேண்டாம் என்றும், இந்தியாவுக்குச் செல்ல இருக்கும் விருப்பம் குறித்து நீதிமன்றத்தில் கேட்கப்படும்போது அதற்கு சம்மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சொன்னதை செய்யாவிட்டால், நீங்கள் டோமினிகா சிறைகளில் அடித்து நொறுக்கப்பட்டு, நீங்கள் இந்தியாவை அடையும்போது தோலில் மட்டும் தான் உங்கள் உயிர் இருக்கும் என்று என் கணவரிடம் மிரட்டியுள்ளார்" என்று சேனல் ஒன்று அளித்த பேட்டியில் பிரீத்தி கூறியுள்ளார்.
இவர்கள் இருவரின் குற்றச்சாட்டு, சோக்சி விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் குற்றச்சாட்டுகளை எதுவும் இந்திய அரசாங்கமோ அல்லது அதன் எந்தவொரு நிறுவனமோ இதுவரை மறுக்கவில்லை. இதனால் `இந்திய அரசின் திட்டமிட்ட ஆப்ரேஷன்' ஆக இருக்குமோ என சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
முன்னதாக சோக்சியின் வாழ்க்கையில் கடந்த 10 நாட்களில் நிகழ்ந்த சம்பவங்களும், அவரின் வழக்கறிஞர் மற்றும் அவரின் மனைவியும் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மே 23 அன்று, சோக்சி காணாமல் போன புகாரை ஆன்டிகுவா போலீஸில் அவரின் குடும்பத்தினர் பதிவு செய்தபோது இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அடுத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது மே 25 அன்று, சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதாக டோமினிகா போலீஸ் அறிக்கை வெளியிட்டது. அடுத்த நாள், சோக்சி தரப்பு சட்டக் குழு டோமினிகன் நீதிமன்றத்தில் ஒரு ஹேபியாஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தது. சோக்சி கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு டொமினிகாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று அவர்கள் வாதம் செய்தனர்.
அடுத்த நாள், ஒரு கத்தார் வணிக ஜெட் டோமினிகாவில் உள்ள டக்ளஸ் சார்லஸ் ஐபோர்ட்டில் தரையிறங்கியது. மே 27 மதியம் இந்த ஜெட் விமானம் தோஹாவிலிருந்து டெல்லியில் தரையிறங்கியதாகவும் பின்னர் டோமினிகாவுக்கு புறப்பட்டதாகவும் விமான பதிவுகள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை இந்திய பாதுகாப்பு வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் சிபிஐ மற்றும் வெளிவிவகார அமைச்சகம் உள்ளிட்ட அதிகாரிகள் குழு டோமினிகாவிற்கு சோக்ஸியை திரும்ப அழைத்து வருவதற்காக புறப்பட்டதாகவும் கூறியது. அதே நேரத்தில், ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன், கரீபியனில் ஊடக நேர்காணல்களில், சோக்ஸியை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல ஒரு ஜெட் டோமினிகாவில் தரையிறங்கியதை உறுதிப்படுத்தினார்.
பின்னர் ஆன்டிகுவா பிரதமரின் அலுவலகம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது, அமைச்சரவை சோக்ஸியின் விஷயத்தைப் பற்றி விவாதித்ததாகவும், அவர் ஆன்டிகுவாவிலிருந்து வெளியேறுவது குறித்து நாட்டின் உளவுத்துறை விசாரித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டது. இதை வைத்து அவர் கடத்தப்பட்டது இந்திய ஆப்ரேஷன் ஆக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாகிறது.
இந்தியாவில் மெஹுல் சோக்சியும் அவரது உறவினரான நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதும், இந்தியாவிலிருந்து தப்பிய மெஹுல் சோக்சி கடந்த 3 ஆண்டுகளாக ஆன்டிகுவா பார்படாஸ் நாட்டு குடிமகனாக வசித்து வந்தும் நினைவுகூரத்தக்கது.