இந்தியா

கேரள ஆட்டோ டிரைவருக்கு விழுந்த ரூ.25 கோடி லாட்டரி பரிசு

JustinDurai

ஓணம் பம்பர் லாட்டரியின் முதல் பரிசான ரூ.25 கோடியை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் வென்றார்.

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அதிக பரிசு தொகையுடன் கூடிய சிறப்பு லாட்டரி சீட்டுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பம்பர் டிக்கெட்டின் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஓணம் பம்பர் டிக்கெட்டின் முதல் பரிசாக ரூ.12 கோடி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டது. ஒரு லாட்டரி சீட்டு 500 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் லாட்டரி குலுக்கல் இன்று திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித் துறை அலுவலகத்தில் வைத்து நடந்தது. அதில் TJ 750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்தது. அந்த சீட்டு வாங்கியது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூப் என்பவர் ஆவார். 32 வயதான அனூப், இந்த லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பழவங்காடி பகவதி ஏஜென்சி இந்த லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்துள்ளது. இரண்டாவது பரிசான ரூ.5 கோடி கோட்டயத்தை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்தது.

இதையும் படிக்க: சீர்வரிசையுடன் கர்ப்பிணி பெண்களுக்கு அரசு நடத்திய சமுதாய வளைகாப்பு விழா