ஆக்ரா தம்பதியினர்
ஆக்ரா தம்பதியினர் புதிய தலைமுறை
இந்தியா

அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க கழிவுநீர் பகுதியில் திருமண நாளை கொண்டாடிய ஆக்ரா தம்பதி!

Jayashree A

அதிகாரிகளுக்கு எதிராக ஆக்ரா தம்பதியினர் தங்களது 17வது திருமண ஆண்டு விழாவை கழிவுநீர் வாய்க்காலில் கொண்டாடினர்.

ஆக்ராவின் நாகலாகாளியை சேர்ந்தவர் பகவான் ஷர்மா, இவரது மனைவி உமா தேவி. இவர்கள் தங்களது 17வது திருமணநாளை தங்களது வீட்டின் அருகில் கழிவுநீர் பகுதியில் நின்றபடி மாலை மாற்றிக்கொண்டு கொண்டாடினர். இவர்களுடன் அப்பகுதி மக்களும் சேர்ந்து பேண்ட் வாசித்து இவர்களின் திருமணநாளை கொண்டாடினர்.

ஏன் அப்படி என்ற கேள்விக்கு பதில் இதோ...

ஆக்ராவில் உள்ள நாகலா காளி செம்ரி மற்றும் ராஜராய் பகுதியை சுற்றி சுமார் பத்தாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் வரை மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் இப்பகுதியில் கடந்த 15 வருடங்களாக இவர்களுக்கு போதிய சாலை வசதியோ கழிவுநீர் வாய்கால், வடிகாலோ இல்லையென்று கூறப்படுகிறது. துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்கால் அருகில் வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனால் சாலைகளில் கழிவு நீர் நிரம்பி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் அசுத்தமான நீரில் செல்ல பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடமும் அரசாங்கத்திடமும் அப்பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர். ஆனால் எவ்வித பயனுமில்லை.

இந்நிலையில், பகவான் சர்மா மற்றும் அவரது மனைவி உமாதேவி தங்களது 17வது திருமணநாளை லட்சத்தீவு அல்லது மாலத்தீவுகளில் கொண்டாட எண்ணியிருந்தனர். ஆனால் தங்கள் பகுதியின் நிலையை அதிகாரிகளும் மக்களும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியாசமாக தங்களது திருமணநாளை தங்கள் பகுதியில் இருக்கும் துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வாய்க்காலில் நின்றபடி மாலை மாற்றி கொண்டாடியுள்ளனர். இவர்கள் மாலை மாற்றிக்கொண்டு எடுத்தப் புகைப்படமானது தற்பொழுது வைரலாகி வருகிறது.