இந்தியா

குஜராத்: மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய கலெக்டர்

JustinDurai
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 11 வயது சிறுமி ஒருவர் ஒரு நாள் ஆட்சியராக இருந்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார்.
அகமதாபாத்தை சேர்ந்த ஃப்ளோரா அசோடியா என்ற சிறுமி மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின்னரும் சிறுமியின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்தது. இந்நிலையில் அச்சிறுமிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்ததும் ஆனால் மோசமான உடல் நிலை காரணமாக அதற்கு சாத்தியமில்லாது போனதும் தொண்டு நிறுவனம் வாயிலாக அகமதாபாத் ஆட்சியர் சந்தீப் சாங்க்ளேவுக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அச்சிறுமி ஒரு நாள் ஆட்சியராக பணியாற்றும் வாய்ப்பை சந்தீப் சாங்க்ளே அளித்தார். இதன் படி நேற்று ஒரு நாள் அகமதாபாத் ஆட்சியராக அச்சிறுமி பணியாற்றினாள். ஆட்சியர் இருக்கையில் அமர்ந்த சிறுமிக்கு பலரும் பரிசுகள் அளித்து விரைவில் உடல் நலம் பெற வாழ்த்தினர்.