இந்தியா

பிரீதம் முண்டே; பூனம் மகாஜன் ஆகியோருக்கு வாய்ப்பு : அத்வானிக்கு வாய்ப்பு இல்லை

webteam

பாரதிய ஜனதா கட்சியின் முதுபெரும் தலைவரான எல்.கே.அத்வானிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. அவருக்கு வயது 92. குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியிலிருந்து அத்வானி 6 முறை மக்களவைக்கு தேர்வாகியிருந்தார். ஆனால் தற்போது அவருக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்வானி பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய தலைவர்களில‌ ஒருவராவார். 2002-ஆம் ஆண்டு முதல் 2004-ஆம் வரை வாஜ்பாய் அமைச்சரவையில் துணை பிரதமராக இருந்தவர் எல்.கே.அத்வானி. ஆனால் அத்வானியின் காந்தி நகர் தொகுதி தற்போது பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதுபோல கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பிரீதம் முண்டே, முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் உள்ளிட்ட பாஜகவின் வாரிசுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அண்மையில் பிஜு ஜனதா தளத்தில் இருந்து பாரதிய ஜனதாவில் இணைந்த முக்கிய தலைவரான பைஜயந்த் பாண்டாவுக்கு ஒடிஷா மாநிலத்திலிருந்து போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இதே போல மகாராஷட்ர மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விக்கே பாட்டீலின் மகனான சுஜய் பாட்டீலுக்கு பாரதிய ஜனதா கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது. காங்கிரஸிலிருந்து பாஜகவில் சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சரமான புரந்தேஸ்வரி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.