இந்தியா

"நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் மனதில் பயத்தை விதைக்க வேண்டும்" - அமித் ஷா

webteam

பாதுகாப்பு விவகாரங்களில் துணிந்து முதலில் நடவடிக்கை எடுக்கும் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்ட‌மாக‌க் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் ராஜர்ஹாட்டில் நடைபெற்ற தேசியப் பாதுகாப்புப் படை நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “இந்தியா பயங்கரவாதத்தை துளியும் பொறுத்துக்கொள்ளாது. நாட்டை பிரிக்கவும், அமைதியைக் குலைக்கவும் நினைப்பவர்கள் மனதில் பயத்தை விதைக்க வேண்டியது தேசிய பாதுகாப்புப் படையின் வேலை. அப்படியும் அவர்கள் நிறுத்தாவிட்டால் தேசிய பாதுகாப்புப் படை அவர்களுக்கு எதிராக செயல்படவேண்டும்.

முன்பு இருந்ததுபோல் இல்லாமல் தற்போது வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் தனித்தனியாக இருக்கிறது. தேசியப் பாதுகாப்புப் படையை உலகிலேயே சிறந்த படையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ராணுவ வீரர்கள் ஆண்டில் 100 நாட்களாவது தங்களது குடும்பத்தினருடன் தங்கியிருக்க வழிவகை செய்யும் ஒரு கொள்கையை மத்திய அரசு வகுத்து வருகிறது. பாதுகாப்பு விவகாரங்களில் துணிந்து முதலில் நடவடிக்கை எடுக்கும் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது” என அமித் ஷா தெரி‌வித்தார்.