நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, கடந்த ஜூலை 20-ம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட முயன்றபோது, இப்போராட்டம் வன்முறையாக மாறியது.
இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, டெல்லியில் போராடி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடங்கின.
இந்தச்சூழலில் தான், இளைஞர்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் ஜூலை 26-ம் தேதி மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவியை தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார்.
இதற்கிடையில், மத்திய அரசு கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தை தவறாக கையாண்டு மாணவர்கள் மீது தேவையற்ற தாக்குதல்களை நடத்தியிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் எனவும் எதிக்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச்சூழலில் தான், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவாகரம் மற்றும் மாணவர் போராட்டம் விவகாரத்தில் மக்களவையில் ஆரோக்கியமான விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”நாடாளுமன்றப் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னதாக வணிக ஆலோசனைக் குழு கூட்டத்தில் கூறியது போல, நீட் தேர்வு குறித்த மாணவர்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஏற்கனவே சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நடப்புக் கூட்டத்தொடரில், பொதுத் தேர்வுகள் (சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்பு) திருத்த மசோதா, 2026 பற்றிய விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் யாரும் நீட் தேர்வு குறித்துத் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யவில்லை. இருப்பினும், நாட்டின் முக்கியத்துவத்தைக் கருதி மீண்டும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.
சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி, பரஸ்பர சம்மதத்துடன் இன்றே இதற்கான நேரத்தையும் கால அளவையும் ஒதுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார். விவாதத்தின் போது அவையிலேயே நேரில் அமர்ந்து எதிர்க்கட்சியினரின் அனைத்துக் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் முழுமையாகப் பதிலளிக்கத் தயார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
மேலும், ஜனநாயகத்தில் விவாதம் மற்றும் உரையாடல் மூலமே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஜனநாயக நிறுவனங்கள் மீது எனக்குத் தீவிர நம்பிக்கை உள்ளது" என்றும், ”அனைத்து உறுப்பினர்களும் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க ஏதுவாக ஒரு நல்ல சூழலில் விவாதத்தை நடத்த ஏற்பாடு செய்யுமாறும்” கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.