இந்தியா

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு

இந்தியாவில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுள்ளது அமித் ஷா மீண்டும் சர்ச்சை பேச்சு

webteam

70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 'பல கட்சி ஜனநாயக முறை' தோற்றுள்ளதாக மக்களின் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 'பல கட்சி ஜனநாயக முறை' தோற்றுள்ளது என்ற மக்களின் மனதில் கேள்வி எழுந்துள்ளது. அத்துடன் பல கட்சி ஜனநாயக முறையால் நமது இலக்கை அடைய முடியுமா என்ற சந்தேகமும் மக்களிடம் எழுந்துள்ளது. இதனால் அவர்கள் வருத்தத்துடன் உள்ளனர்.  நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள பல கட்சி முறைகளை ஆராய்ந்து பார்த்த பிறகே இந்த முறை சேர்க்கப்பட்டது. 

எனினும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அரசு இயந்திரம் முடங்கி இருந்தது. முக்கிய முடிவுகளை எடுக்க காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு தவறியது. சிலர் 30 ஆண்டுகாலம் ஆட்சியிலிருந்து ஒரு பெரிய முடிவை மட்டுமே எடுப்பார்கள். ஆனால் எங்கள் அரசு 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி உள்ளிட்ட 50 முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. வேறு எந்த ஆட்சியும் எடுக்க பயப்படும் முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம்” எனத் தெரிவித்தார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சு ஒரே நாடு, ஒரே கட்சி என்பதை நோக்கும் செல்லும் வகையில் இருப்பதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே கடந்த 14ஆம் தேதி அமித் ஷா இந்தி குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.