ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், இதுவரை ஒரு முக்கியத் தலைவர் உட்பட 6 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, "ஒடிசாவின் கந்தமால் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில், மாவோயிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் கணேஷ் உய்கே உட்பட 6 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இது நக்ஸல் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான பயணத்தில் ஒரு மைல்கல்" என்று பாராட்டியுள்ளார். மேலும், 2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்ஸலிசத்தை முழுமையாக ஒழிக்க அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அவர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஒடிசா காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழு (SOG), சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப் ஆகிய படைகள் இணைந்து, ஒடிசாவின் கஞ்சம் மற்றும் கந்தமால் ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் உள்ள வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை இரவு 2 மாவோயிஸ்டுகளும், வியாழக்கிழமை காலையில் கணேஷ் உய்கே உட்பட 4 மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டதாக ஒடிசா டிஜிபி ஒய்.பி. குரானியா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், சம்பவ இடத்திலிருந்து ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, அப்பகுதியில் இன்னும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், கொல்லப்பட்டவர்களில் மிக முக்கியமானவர் கணேஷ் உய்கே (69). இவர் தடை செய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினராகவும், ஒடிசா மாநிலப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு ஒடிசா காவல்துறை சார்பில் ₹1.1 கோடி வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. 2013-ல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜிரம் காட்டி தாக்குதலின் மூளையாக இவர் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தேடுதல் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுள்ள மற்ற மாவோயிஸ்டுகளை காவல்துறையினர் இன்னும் அடையாளம் காணவில்லை.