கோவாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கணைய அழற்சி நோயால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கோவாவில் முதல்வர் மாற்றப்படலாம் என தகவல் வெளியானது. இதற்கிடையே கோவா அரசியல் வானிலையில் சற்றே மாற்றங்களை நிகழ்த்தி வந்தது காங்கிரஸ். கோவா சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்க உரிமை கோரியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 16 பேரும் ஒன்றாக ஆளுநர் மாளிக்கைக்கு சென்று ஆட்சி அமைக்க கோரும் கடிதத்தை கடந்த செப்டம்பர் 17ம் தேதி அளித்தனர். காங்கிரஸ் ஆட்சி அமைக்க வலியுறுத்தியும் ஆளுநர் மிரிதுலா சின்ஹா இதுவரை அழைப்பு எதுவும் விடுக்கவில்லை.
இதற்கிடையே தேசிய செயலாளர் ராம்லால், கோவா பாஜக தலைவர் விஜய் டெண்டுல்கர், மத்திய அமைச்சர் ஸ்ரீபத் நாயக் உள்ளிட்ட பாஜக தலைவர் குழு கடந்த வாரம் டெல்லியில் பயணம் மேற்கொண்டனர். இதனையடுத்து,பாஜக தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் முதல்வராக பாரிக்கர் நீடிப்பார் என்று தெரிவித்த அமித் ஷா, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்றார். மனோகர் பாரிக்கர் மட்டுமல்லாமல் பாஜகவின் மூத்த அமைச்சர்கள் பிரான்சிஸ் டி’சௌஸா மற்றும் பந்துரங் மத்கைகர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மனோகர் பாரிக்கர்ரை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மூத்த அமைச்சர்களுக்கு அந்தப் பொறுப்பை அளிக்க வேண்டும் எனக் கூட்டணி கட்சியான மஹாராஷ்ட்ரவாடி கோமண்டக் கட்சி கடந்த வாரம் வலியுறுத்தியது இதனால் தற்போது கோவா அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி உள்ளது.