கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய பொது முடக்கம் மே 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சந்தித்துப் பேசினார். இதனையடுத்து நாளை பொது முடக்கம் நீட்டிப்பு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22 ஆம் தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்பு மார்ச் 25 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3- ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் நடைமுறையிலிருந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்று நோய்களின் ஹாட் ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
எனவே இந்தக் குறிப்பிடப்பட்ட நகரங்களில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் நீடிக்கப்படுவது குறித்து வரும் 31 ஆ ம்தேதி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் எனக் கூறப்பட்டது. இதனிடையே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மாநில முதல்வர்களின் கருத்தை அமித்ஷா நேற்று கேட்டறிந்ததாகத் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அமித்ஷா இன்று பிரதமர் மோடியைச் சந்தித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
கடந்த சில நாட்களாகப் பிரதமர் அலுவலகம், ஜூன் 1 முதல் எப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.இந்திய அளவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், எப்படி பொருளாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதது என்பது குறித்து அமித்ஷாவும் மோடியும் விவாதித்தனர் என்று தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. அமித்ஷாவுடனான ஆலோசனையைத் தொடர்ந்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.