முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். உத்தரப்பிரதேசத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மோடி, ராஜீவ் காந்தியை போபர்ஸ் ஊழலில் ‘நம்பர் ஒன்று’ என்று காட்டமாக கூறியிருந்தார். இதற்கு ராகுல் காந்தியும் எதிர்ப்பு தெரிவித்து தன்னுடைய கருத்தினை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், அமேதியை சேர்ந்த மனோஜ் காஷ்யப் என்ற இளைஞர், பிரதமரின் ராஜீவ் காந்தி குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை அவர் தன்னுடைய ரத்தத்தில் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “ராஜீவ் காந்திக்கு எதிரான பிரதமரின் பேச்சு எனக்கு அதிர்ச்சி அளித்தது. ராஜீவ் காந்திதான் ஓட்டுரிமைக்கான வயதினை 18ஆக குறைத்தார், பஞ்சாயத்து ராஜ் முறையை கொண்டு வந்தார், கணினி புரட்சியை நம்முடைய நாட்டில் செய்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாயே தன் கட்டுரை ஒன்றில் ராஜீவ் காந்தியை பாராட்டி எழுதியுள்ளார்.
அமேதி மக்களை பொருத்தவரை, ராஜீவ் காந்தியை அவமதித்தவர்கள் அவரை கொன்றவர்களுக்கு சமமானவர்கள். ராஜீவ் காந்தி அமேதி மக்களின் மனங்களில் வாழ்கிறார். மறைந்த தலைவர் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு அறிவுறுத்த வேண்டும். இந்தக் கடிதம் அரசியல் ரீதியாக எழுதப்படவில்லை. மறைந்த எங்கள் தலைவர் மீதுள்ள உணர்வினால் எழுதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.