இந்தியா

கொரோனா நோயாளியை அழைத்துச் செல்ல ரூ.1.20 லட்சம் வசூல்: ஆம்புலன்ஸ் உரிமையாளர் கைது

கொரோனா நோயாளியை அழைத்துச் செல்ல ரூ.1.20 லட்சம் வசூல்: ஆம்புலன்ஸ் உரிமையாளர் கைது

JustinDurai

டெல்லியில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரின் மகளிடம் ரூ1.20 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த அமந்தீப் கரூர் என்ற பெண், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தன் தாயாரை மருத்துவமனையில் சேர்க்க முயன்றுள்ளார். டெல்லி, குர்கான் உள்ளிட்ட இடங்களில் படுக்கை கிடைக்கவில்லை. இறுதியில் 350 கி.மீ. தொலைவில் இருக்கும் லூதியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் படுக்கை இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக தன் தாயாரை அங்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்காததால், தனியார் ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தை அமந்தீப் கரூர் தொடர்பு கொண்டுள்ளார். அந்த ஆம்புலன்ஸ் உரிமையாளரான மிமோ குமார் புந்துவால், அந்த பெண்ணிடம் ரூ.1.40 லட்சம் கட்டணம் கேட்டுள்ளார். வேறு வழியில்லாததால் அமந்தீப் கரூர் அவர் கேட்ட தொகையை செலுத்தி தன் தாயாரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இதற்கிடையில் அமந்தீப் கரூரின் நண்பர் ஒருவர் அந்த ஆம்புலன்ஸ் சேவைக்கான ரசீதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதை பார்த்த பலர் கடும் கண்டனங்களை பதிவிட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக விசாரணை செய்து ஆம்புலன்ஸ் உரிமையாளர் மிமோ குமார் புந்துவாலை நேற்று கைது செய்தனர். அவரது ஆம்புலன்ஸையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் எம்.பி.பி.எஸ் பட்டதாரியான மிமோ, கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆம்புலன்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் கடந்த ஒரு மாதமாக இவர் இது போல பல நோயாளிகளிடம் பல மடங்கு பணத்தை கட்டணமாக வசூலித்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பின் குற்றம்சாட்டப்பட்ட மிமோ குமார் புந்துவால், 95,000 ரூபாயை அமந்தீப் கரூரிடம் திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.