கர்நாடகாவில், இனி எந்த விஐபியின் பாதுகாப்பு வாகனம் சென்றாலும் அதற்காக ஆம்புலன்ஸ் காத்திருக்க தேவையில்லை. ஆம்புலன்ஸ் யாருக்கும் காத்திருக்காமல் செல்லலாம் என மாநில போலீஸ் தலைமை அதிகாரி ராஜூ தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஜூன் மாதம் துணை முதலமைச்சரும், உள்துறை அமைச்சருமான பரமேஷ்வராவின் பாதுகாப்பு வாகனம் முதலில் செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று காக்க வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் நின்ற இடத்திலேயே நின்ற ஆம்புலன்ஸ், பரமேஷ்வராவின் பாதுகாப்பு வாகனத்திற்காக காத்திருந்தாக சொல்லப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையாகவும் பேசப்பட்டது.
இதனையடுத்து விஐபிக்களின் பாதுகாப்பு வாகனங்களை விட ஒரு உயிரை மீட்பதுதான் முக்கியம் என மாநில போலீஸ் தலைமைக்கு பரமேஷ்வர் அறிவுறுத்தினார். அத்தோடு மட்டுமில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டிருந்தார். அதில், “ சில சமயங்களில் விஐபிக்களின் பாதுகாப்பு வாகனங்கள் செல்வதற்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிகிறது. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உடனடி மருத்துவ உதவிகளை அளித்து அவரை காப்பாற்றுவதை விட முக்கியம் வேறொன்றுமில்லை. எனவே அதனை நோக்கி பயணியுங்கள். இனிமேல் விஐபிக்களின் பாதுகாப்பு வாகனத்திற்காக ஆம்புலன்ஸை நிறுத்தி வைக்க வேண்டாம்”என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இனி எந்த விஐபியின் பாதுகாப்பு வாகனம் சென்றாலும் அதற்காக ஆம்புலன்ஸ் காத்திருக்க தேவையில்லை என மாநில போலீஸ் தலைமை அதிகாரி ராஜூ உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆம்புலன்ஸ் யாருக்கும் காத்திருக்காமல் செல்கிறது என மாநிலத்தில் உள்ள போக்குவரத்து காவலர்கள் உறுதி செய்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பாதுகாப்பு வாகனத்திற்கு முன்னதாக, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார் போலீஸ் அதிகாரி நிஜிலிங்கப்பா. இதனையடுத்து போலீஸ் துறை சார்பில் அவருக்கு பாராட்டுடன் வெகுமதியும் வழங்கப்பட்டது.