கிரிஷ் மகாஜன், மாதவி ஜாதவ் Pt web
இந்தியா

குடியரசு தின உரையில் அம்பேத்கர் பெயர் இல்லை., பாஜக அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலர்!

மகாராஷ்டிராவின் நாசிக்கில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒன்றில் பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்துகொண்டு பேசும்போது , அவரது உரையில் அம்பேத்கரின் பெயரைக் குறிப்பிடவில்லை எனக் கேள்வி எழுப்பிய வனக்காவலர் மாதவி ஜாதவை பலரும் பாராட்டி வருகின்றனர்.

PT WEB

இந்திய நாட்டின் 77வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழா ஒன்றில் பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் கலந்து கொண்டு குடியரசு தின உரையாற்றினார். அப்போது, அமைச்சரின் உரையில், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாகேப் அம்பேத்கர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி பணியில் இருந்த வனக்காவலர் மாதவி ஜாதவ் கேள்வி எழுப்பியது தற்போது பேசுபொருளாகி இருக்கிறது.

வனக்காவலர் மாதவி ஜாதவ்

இந்த சம்பவம் தொடர்பான காணொளியில் வனக்காவலர் மாதவி ஜாதவ், "குடியரசு தின உரையில், அரசியல் அமைப்பிற்கு சம்பந்தமில்லாதவர்களின் பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்பட்டது. ஆனால், குடியரசு தினத்திற்கு உண்மையாகவே உரியவரான பாபாசாகேப் அம்பேத்கரின் பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை" என கேள்வி எழுப்புகிறார். மேலும், இதனால் என் வேலைக்கு பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. அமைச்சர் அம்பேத்கரின் அடையாளத்தை அளிக்க முயற்சி செய்கிறார். அம்பேத்கரின் வரலாறு இருட்டடிப்பு செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பேசிய வன காவலர் மாதவி ஜாதவின் காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தநிலையில், அமைச்சரிடன் கேள்வி எழுப்பிய மாதவி ஜாதவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து, மும்பை பிராந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வர்ஷா கெய்க்வாட் இந்த சம்பவம் தொடர்பாக பாஜகவை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், ”டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயர் பாஜகவிற்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அவர்கள் தங்கள் அரசாங்கத்தின் அடிப்படையான அரசியலமைப்பை உருவாக்கியவரை மீண்டும் மீண்டும் அவமதிக்கின்றனர். சமத்துவம், சமூக நீதி மற்றும் சகோதரத்துவத்தை வெறுக்கும் பாஜக, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரை இந்த நாட்டிலிருந்து துடைக்க விரும்புகிறது என்பது உண்மைதான். தனது வேலையைப் பற்றி கவலைப்படாமல், பாபாசாகேப்பின் அவமானத்திற்கு எதிராக குரல் எழுப்பிய அதிகாரியை நான் வணங்குகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன்

இந்த விவகாரம் தொடர்பாக பாஜக அமைச்சர் கிரிஷ் மகாஜன் விளக்கமளித்துள்ளார். அதில் “குடியரசு தின விழாவில் பாபா சாகேப் அம்பேத்கரின் பெயர் விடுபட்டது தற்செயலானதே. நான் எப்போதும்; எல்லா மேடைகளிலும் அம்பேத்கரை புகழ்வேன். ஆனால், இந்த தவறுதலாக அம்பேத்கர் பெயரை கூற மறந்து விட்டேன். இதன்காரணமாக யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால், அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.