இந்தியா

10,000 இல்லையாம், 20,000 ஊழியர்களின் வேலை காலி - மெட்டா, ட்விட்டர் வரிசையில் அமேசான்!

JustinDurai

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமாக அமேசான், உலகெங்கும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக மெட்டா, ட்விட்டர் உள்ளிட்ட ஆகிய நிறுவனங்கள் செலவீனங்களை குறைக்க தமது ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில் சமீபத்தில், பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானும் நஷ்டம் அதிகரிப்பதால் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை வரும் வாரம் முதல் துவங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 20,000 வரை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிநீக்கம் என்பது அனைத்து துறைகளிலும் பணியாற்றும், அனைத்து விதமான ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய எண்ணிக்கை ஆகும். இதுவரை இவ்வளவு அதிகமான ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்தது இல்லை.

ஊழியர்களின் 1வது லெவல் முதல் 7வது லெவல் வரை இந்த பணி நீக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 20,000 பணியாளர்களின் நீக்கம் என்பது மொத்த பணியாளர்களில் 1.3 சதவிகிதமாகும். அமேசானில் 1.5 மில்லியன் பணியாளர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்குகளின் போது, கடைகள், அலுவலகங்கள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போக்கு வெகுவாக அதிகரித்தது. ஆனால், தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்தகட்ட பணிகளுக்கு செல்வது ஊழியர்களுக்கு சிரமமாக இருக்கும். ஐடி நிறுவனங்களில் தொடர் பணிநீக்க அறிவிப்புகள் அதன் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: வெடித்து சிதறும் எரிமலை... வானம் முழுக்க சாம்பல் மழை! பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!