Amazon
Amazon File Image
இந்தியா

வாடிக்கையாளருக்கு அனுப்பிய 10 ஐபோன்கள், ஏர்பாட்ஸ் திருட்டு - அமேசான் டெலிவரி பாய் மீது வழக்கு!

Justindurai S

ஹரியானா மாநிலம் பிலாஸ்பூர் பகுதியில் இயங்கிவரும் மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன் என்ற நிறுவனம், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் நிலைய பொறுப்பாளராக இருக்கும் ரவி என்பவர், சமீபத்தில் பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர், “அமேசான் டெலிவரி எக்ஸிகியூட்டிவ் லலித் என்பவர், ‘10 ஐபோன்கள் மற்றும் ஒரு ஏர்போட்ஸ்’ ஆர்டர் செய்த வாடிக்கையாளரிடம் அதை டெலிவரி செய்ய போயிருந்தார். அங்கு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி, அப்பொருட்கள் அடங்கிய பார்சலை எங்களிடம் திரும்ப ஒப்படைத்தார். அந்த பேக்கேஜிங்கை நாங்கள் ஆய்வு செய்தபோது அதிலிருக்கும் ஐபோன்கள் அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. பார்சலில் இருந்த அசல் ஐபோன்களை திருடிவிட்டு போலி ஐபோன்களை மாற்றம் செய்து ஒப்படைத்திருக்கிறார். இதற்கிடையில், பார்சல் கிடைக்காததால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் தனது ஆர்டரையும் ரத்து செய்து விட்டார். டெலிவரி எக்ஸிகியூட்டிவ் லலித் தனது சகோதரர் மனோஜை அனுப்பி இந்த பொருட்களை எங்களிடம் ஒப்படைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து டெலிவரி எக்ஸிகியூட்டிவ் லலித் மீது பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளான 420 (ஏமாற்றுதல்), 408 (பணியாளரின் நம்பிக்கை மீறல்) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள லலித்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.