இந்தியா

அமேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் உதயம் - முன்னாள் ஊழியர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!

ஜா. ஜாக்சன் சிங்

அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் முதல்முறையாக தொழிற்சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் ஒருவரின் முயற்சியால் இந்த உரிமை கிடைத்துள்ளது.

உலகின் மிகப்பெரிய நிறுவனமான அமோசானின் நியூயார்க் குடோனில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீர் பணிநீக்கம், உரிய ஊதியம் வழங்கவில்லை என பல்வேறு புகார்கள் அமேசான் நிறுவனத்திற்கு எதிராக எழுப்பப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஊழியர்கள் ஒன்று சேர்ந்து தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொண்டனர். அதில் முக்கிய பங்கு வகித்தவர் அமேசான் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கிறிஸ்டியன் ஸ்மால்ஸ். இவர், 2020-ம் ஆண்டு கொரோனா பரவலின் போது பணி செய்யும் இடத்தில் உரிய பாதுகாப்பு இல்லை என்று போராட்டத்தை முன்னெடுத்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்.

கிறிஸ்டியன் மற்றும் அமேசான் ஊழியர்களின் தொடர் முயற்சியின் விளைவாக, வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தற்போது அமேசானில் தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. 55 சதவீதம் பேர் தொழிற்சங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். வணிக சேவை வழங்கும் நிறுவனத்தில் தொழிற்சங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், தொழிலாளர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளது. தொழிலாளர்களோ, இது தங்கள் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.