இந்தியா

தனிக்கட்சி தொடங்கும் அமரிந்தர் சிங்; பாஜகவுடன் கூட்டணி - காங்கிரஸூக்கு நெருக்கடியா?

கலிலுல்லா

தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங், பாஜகவுடன் இடபங்கீடு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமரிந்தர் சிங் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அமரிந்தர் சிங், பாஜகவில் இணைவார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள அமரிந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர், பஞ்சாப் மக்களின் நலனுக்காக அமரிந்தர் சிங் விரைவில் தனிக் கட்சி தொடங்குவார் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் அரசியல் நிரந்தரநிலையும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பும் தேவை என கூறியுள்ள அமரிந்தர் சிங், 2022 ஆம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின் போது, விவசாயிகள் போராட்டம் அவர்களுக்கான நலனில் முடிவடைந்தால் பாஜகவுடன் இடபங்கீடு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அகாலி தளம் கட்சியிலிருந்து பிரிந்து வந்தவர்களுடனும் கூட்டணி அமையும் என்றும் கூறியுள்ளார். விரைவில் பஞ்சாபில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அமரிந்தர் சிங்கின் தனிகட்சி முடிவு காங்கிரஸூக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.