இந்தியா

பயனாளர் தகவலை உரிய அனுமதியுடன் பகிர்கிறோம் - கூகுள் விளக்கம்

பயனாளர் தகவலை உரிய அனுமதியுடன் பகிர்கிறோம் - கூகுள் விளக்கம்

JustinDurai
வாடிக்கையாளர்களின் கூகுள் பே பரிவர்த்தனை தரவுகளை மூன்றாம் தரப்பினருடன் அவர்கள் அனுமதியுடனே பகிர்ந்து கொள்வதாக கூகுள் தெரிவித்துள்ளது.
 
கூகுள் பே செயலி, மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படவில்லை என்றும், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை என்றும், அதில் பணப்பரிமாற்றம் செய்வோரின் வங்கிக் கணக்குகளுக்கு பாதுகாப்பு இல்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
 
கூகுள் நிறுவனம் இந்த வழக்கு தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘’கூகுள் பே என்பது ஒரு செயலியை அளிக்கும் மூன்றாம் தரப்பு சேவை நிறுவனம் மட்டும்தான். என்.பி.சி.ஐ மற்றும் கட்டண சேவை வழங்கும் (பி.எஸ்.பி) வங்கிகளின் முன் அனுமதியுடன் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை தரவுகளை மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், வாடிக்கையாளரின் பெயர், முகவரி, இமெயில் ஐடி, மற்றும் பரிவர்த்தனை தொடர்பான விவரங்கள் போன்ற சாதாரண வாடிக்கையாளர் தரவுகளை மட்டுமே என்.பி.சி.ஐ வழிகாட்டுதல்களின்படி கூகுள் பே சேமித்து வைக்கிறது என்றும் டெபிட் கார்டு எண் அல்லது யுபிஐ பின் போன்ற தரவுகளை கூகுள் பே சேமிப்பதில்லை என்றும் கூகுள் கூறியுள்ளது. இத்தகைய தரவுகளை பி.எஸ்.பி வங்கியின் சேவையகங்களில் மட்டுமே சேமிக்கப்படுகிறது என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி இதுவரை தங்கள் பதில்களை தாக்கல் செய்யாததால், நவம்பர் 10-ம் தேதிக்கு அடுத்தக்கட்ட விசாரணைக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.