இந்தியா

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய எதிர்ப்பு - அல்லோபதி மருத்துவர்கள் போராட்டம்

webteam

ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து அல்லோபதி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் அரசு இதழில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது அல்லோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சையை ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என குறிப்பிட்டிருந்தது. மேலும், நிதி ஆயோக் அமைக்கப்பட்டு நான்கு குழுக்கள் உருவாக்கப்பட்டன. மருத்துவக் கல்வி, பொதுமக்களுக்கான சுகாதார முறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி என எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்து ஆயுர்வேதத்தையும் அல்லோபதியையும் சேர்த்து உருவாக்க இருப்பதாகவும் 2030 ஆம் ஆண்டு கொண்டு வருவதற்கான முயற்சி எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்ட குழு இதனை செய்யும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் தேசிய கல்விக்கொள்கையை பயன்படுத்தி ஆயூஷ் பயிலும் மாணவர்கள் அவர்கள் விருப்பத்தின் பேரில் அல்லோபதி மருத்துவத்தையும் பயின்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து இந்திய மருத்துவ கழகத்தைச் சேர்ந்த அல்லோபதி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 200 க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.