இந்தியா

ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு

ஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ வழக்குப் பதிவு

webteam

தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்ட புகாரில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் எஸ்.என்.சுக்லா நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதாவது இந்தக் கல்லூரியில் 2017-18ஆம் ஆண்டி மாணவர் சேர்க்கைக்கான கால அளவை உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி நீட்டித்து நீதிபதி சுக்லா அனுமதி வழங்கினார். 

இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உள் விசாரணைக் குழு விசாரித்தது. இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் இவரை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வருமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருந்தார்.  

இதற்கிடையே இந்த மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சிபிஐ நீதிபதி சுக்லா மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதப்பட்டது. சிபிஐ எழுதிய கடிதத்திற்கு அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் போதிய ஆதாரங்கள் உள்ளதால், நீதிபதி சுக்லா மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.என்.சுக்லா மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி வேலைகளில் ஈடுபட்டது, பதவியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.