இந்தியா

தங்களின் திருமணத்தை அங்கீகரிக்க கோரி இரு பெண்கள் மனு - நிராகரித்தது உயர் நீதிமன்றம்

ஜா. ஜாக்சன் சிங்

தங்களின் திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி இரு பெண்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 22 மற்றும் 23 வயதான இரண்டு இளம்பெண்கள் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கம், பின்னாளில் காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஆனால், இரு பெண்கள் திருமணம் செய்வதை இந்த சமூகமும், தங்கள் பெற்றோரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என உணர்ந்த அவர்கள், வேறு ஊருக்கு சென்று ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த விஷயம் அந்தப் பெண்களின் வீட்டாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, அவர்களில் ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை மற்றொரு பெண் ஏமாற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அவரை மீட்டுத் தரக் கோரியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை கடந்த 6-ம் தேதி விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, அந்தப் பெண்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். அப்போது அவர்கள் வாதிடுகையில், "இந்து திருமணச் சட்டமானது இரண்டு பேரின் திருமணத்தை தான் குறிக்கிறதே தவிர, அவர்கள் கட்டாயம் ஒரு ஆண் - ஒரு பெண்ணாக தான் இருக்க வேண்டும் எனக் கூறவில்லை. அதேபோல, தன் பாலின திருமணத்துக்கு அந்த சட்டம் எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே, மனம் ஒத்து நாங்கள் செய்து கொண்ட திருமணத்தை நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும்" எனக் கோரினர்.

இதற்கு உத்தரபிரதேச அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். இந்து மதத்தின்படி திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேதான் நடைபெற வேண்டும். மற்ற நாடுகளில் வேண்டுமானால் திருமணம் ஒரு ஒப்பந்தமாக இருக்கலாம். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை திருமணம் ஒரு புனிதமான சடங்கு ஆகும். அதை இவ்வாறு கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது" என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர்கள் செய்து கொண்ட திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என உத்தரவிட்டார்.