உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கிய அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்தச் சம்பவத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் பொறுப்பு இருப்பதாக கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று, மதுபான விடுதியில் சந்தித்த நபர் ஒருவர், தாம் மதுபோதையில் இருந்தபோது தன்னை2 முறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக முதுகலை மாணவி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபர், தனக்கு ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்தவழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழக்கியிருப்பதும், அதற்கு அவர் அளித்த காரணங்களும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நீதிபதி தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்ட பெண்ணின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த பெண் சுயவிருப்பத்தின் பெயரிலேயே பாரில் உட்கார்ந்து மது அருந்தியதாகவும் அதிகாலை 3 மணி வரை அங்கேயே இருந்ததாகவும் அலகாபாத் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது. அதன் பிறகும் யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவருடன் அந்த பெண்ணேதான் சென்றார் என்றும் குறிப்பிட்ட ஐகோர்ட், "அந்த பெண்ணே தனக்குப் பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார்.. அதற்கு அவரேதான் பொறுப்பு" என்று கூறினார். இந்த கருத்து தான் இப்போது விவாதமாக மாறியிருக்கிறது.
மறுபுறம் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இருவருடைய சம்மதத்துடன் தான் இது நடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது கடந்த கால குற்றவியல் வரலாறு இல்லாததையும் மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "இதன் அடிப்படையில் அந்த நபருக்கு ஜாமீன் வழங்கலாம்" என்று குறிப்பிட்டது.
பெண்ணின் குற்றச்சாட்டுகள் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் கூட, சம்பவத்திற்கு அவரும் பொறுப்பு என்று கருத வேண்டி இருப்பதாகக் கூறிய நீதிபதியின் இதுபோன்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு முதல்முறை அல்ல. பெண்ணின் மார்பு பகுதிகளைப் பிடிப்பது, உடைகளைக் கிழிப்பது பாலியல் வன்கொடுமை குற்றம் அல்ல என்று இதுபோன்ற விவாதத்தை ஏற்படுத்தகூடிய தீர்ப்புகள் பலவற்றை அலகாபாத் நீதிமன்றம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.