உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கடந்த 2024-ம் ஆண்டு இஸத்நகர் காவல் நிலையத்தில், ஹிமாந்த் சிங் என்பவர் மீது ஒரு பெண் பாலியல் வன்கொடுமை மற்றும் மிரட்டல் தொடர்பாக வழக்கு தொடுத்தார். இதையடுத்து, காவல்துறையினர் ஹிமாந்த் சிங் மீது மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். எனினும், அவரது தந்தை வேக்ராஜ் சிங் மற்றும் மூத்த சகோதரர் தௌலத் ஆகியோர் ஆரம்பகட்ட காவல்துறை விசாரணையில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆனால், விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பெண், விடுவிக்கப்பட்ட இருவரும் தன்னை ‘சமார்’ என்ற சாதிப் பெயரைப் பயன்படுத்தி அழைத்ததாக கூறினார். இதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் இருவரையும் வழக்கில் சேர்த்து அவர்களுக்கு சம்மன் அனுப்பியது. எனினும், வேக்ராஜ் இந்த வழக்கு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், சமீபத்தில் நீதிபதி சஷ்தோஷ் ராய் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரனைக்கு வந்தது.
இந்த நிலையில் தான், சாதிப் பெயரை பயன்படுத்தியது மட்டுமே போதுமான ஆதாரமாக இருக்காது என்றும், அந்த வார்த்தை மூலம் சாதியின் அடிப்படையில் அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் அல்லது அறிவு இருந்தது என்பதற்கான நம்பகமான ஆதாரம் இருக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், விசாரணை நீதிமன்றம் போதுமான மற்றும் வலுவான ஆதாரங்கள் இல்லாமல் இருவரையும் வழக்கில் சேர்த்தது சட்டரீதியாக தவறு எனக் கூறியதுடன், அவர்களுக்கு எதிரான சம்மன் உத்தரவையும் ரத்து செய்திருக்கிறது.
இந்தச்சூழலில் தான், சாதிப் பெயர் பயன்படுத்தப்பட்டது என்ற காரணம் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு போதுமானதல்ல; அந்த வார்த்தை சாதியின் அடிப்படையில் ஒருவரை அவமதிக்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டதா? என்பதும் முக்கியம் என்ற நீதிமன்றத்தில் தீர்ப்பு விவாதப்பொருளாகியிருக்கிறது.