இந்தியா

'அல்லா ஹு அக்பர்' கோஷம் தான் மாணவர்களை கொதிப்படைய செய்தது : கர்நாடகா அமைச்சர் பேச்சு

webteam

"கல்லூரி மாணவியின் 'அல்லா ஹு அக்பர்' கோஷம் தான் மாணவர்களை கொதிப்படைய செய்தது" என்று கர்நாடக கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறியுள்ளார்.

ஹிஜாப் விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாபுக்கு எதிராகவும், ஆதரவாகவும் இருதரப்பு மாணவர்கள் கல்விச் சாலைகளில் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், நேற்று கர்நாடாகவில் உள்ள ஒரு கல்லூரியில் பர்தா அணிந்து வந்த மாணவியை, காவித் துண்டு அணிந்திருந்த மாணவர்கள் பலர் சூழந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்களை கண்டு பின்வாங்காத அந்த மாணவி, துணிச்சலுடன் 'அல்லா ஹு அக்பர்' என கோஷமிட்டார். எனினும், அந்த மாணவியை மாணவர்கள் விடாமல் துரத்திச் சென்றனர். பின்னர், கல்லூரி நிர்வாகிகள் அங்கு வந்து மாணவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

இந்நிலையில், அந்த மாணவியின் துணிச்சலான நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடகா கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "பர்தா அணிந்து வந்த மாணவியை மாணவர்கள் சுற்றி வளைக்கவில்லை. மாறாக, அந்த மாணவி 'அல்லா ஹு அக்பர்' கோஷம் எழுப்பிய பிறகு தான், மாணவர்கள் அவரை சூழ்ந்தனர். அல்லா ஹு அக்பர் கோஷம் தான் மாணவர்களை கொதிப்படைய செய்தது. கல்லூரியில் எதற்காக 'அல்லா ஹு அக்பர்', 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிட வேண்டும்?" என அமைச்சர் பி.சி. நாகேஷ் கூறினார்.