இந்தியா

ரஃபேல் விவகாரம் ! கடந்தாண்டுகளில் கடந்து வந்த பாதை

ரஃபேல் விவகாரம் ! கடந்தாண்டுகளில் கடந்து வந்த பாதை

webteam

ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10.40 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதில்  ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என தெரிவித்துள்ளது. மேலும்  ரஃபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட முடியாது என யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

 
ரஃபேல் ஒப்பந்தத்தின் பின்னணியும், வழக்கு கடந்து வந்த பாதையும்...

  • முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது போர் விமானம் வாங்குவது தொடர்பாக 2007 முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக 2012 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது.                                                                                                                                                                                                                                                                                                                                                  
  • பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 18 விமானங்களை பறக்கும் நிலையில் வாங்கவும், 108 விமானங்களை டஸால்ட் நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல்-ல் தயாரிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின் 2015ம் ஆண்டு இந்த முயற்சி கைவிடப்பட்டு அதற்கடுத்த ஆண்டு செப்டம்பரில் பாரதிய ஜனதா அரசு புதிய ஒப்பந்தம் செய்தது.                                                          
  • அந்த ஒப்பந்தத்தில் பறக்கும் நிலையில் இருக்கும் 36 விமானங்களை 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து விமான உதிரி பாகங்களை தயாரிப்பது தொடர்பாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் டஸால்ட் நிறுவனம் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தமிட்டது. ஆனால், அதே ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு எழுப்பியது.                                                                                                                                                                                                                                                                                
  • ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது ஒரு விமானத்தை 570 கோடி ரூபாய் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பாரதிய ஜனதா அரசு ஆயிரத்து 670 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமிட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஹெச்.ஏ.எல் நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியது                                                                                                                                                                                                                                                                                                                   
  • கடனில் இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயமடைவதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பதால், விமானத்தின் விலையை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியது.                                                                                                                                                                                                                                                                                  
  • காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹாலந்தே, ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு தான் பரிந்துரை செய்ததாக கடந்த செப்டெம்பரில் தெரிவித்தார். காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, விதிமுறைகளின்படியே ரஃபேல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் பேசியதை விட குறைந்த விலைக்கே ஒப்பந்தமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.                                                                                               
  • நாட்டின் பாதுகாப்பு கருதி விமானத்தின் விலையை வெளியே தெரிவிக்கவில்லை என மத்திய அரசு கூறி வந்த நிலையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கடந்த அக்டோபர் 24ம் தேதி இதுதொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.                                                                                                                                                                                                        
  • அதைத் தொடர்ந்து வினித் தாண்டாவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.                                                                                                                                              
  • இந்நிலையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.