இந்தியா

5 லட்சத்துக்கு உட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகை வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்

webteam

தனி நபர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய்க்குட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகை உடனடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதையடுத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதார நிலையானது கடுமையாக சரிவடைந்திருக்கிறது. இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் தனி நபர்கள், நிறுவனங்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்கு சில சலுகைகளை வழங்கினார்.அதன் பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பல சலுகைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்புகளால் பொருளாதார ரீதியில் தவித்து வரும் தனி நபர்கள் மற்றும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனி நபர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய்க்குட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகை உடனடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 14 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி, சுங்க வரி நிலுவைத் தொகைகளும் உடனடியாக விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் தொழில், வணிக நிறுவனங்கள் பலன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இவ்விரு தரப்பினருக்கும் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது