இந்தியா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு: அனைவரையும் விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

நிவேதா ஜெகராஜா

நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகார பிரிவை பயன்படுத்தி கடந்த மே மாதம் விடுவித்தது. இதனைதொடர்ந்து, அதே வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களையும் விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

இதில் பதிலளித்த தமிழக அரசு, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை முடிவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தியதை சுட்டிக்காட்டியதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்திருந்தது. அதே வேளையில் மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோரும் பேரறிவாளன் வழக்கை மேற்கோள்காட்டி தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை நாடினர். இந்நிலையில், நளினி மற்றும் ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 3-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள், `இந்த வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் ஆகியோரின் மனுக்கள் பட்டியலிடப்படாததையும் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து நீதிபதிகள் வழக்கை திங்கட்கிழமை (நவம்பர் 7-ம் தேதிக்கு) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், `திங்கட்கிழமையன்று இந்த வழக்கில் தமிழக அரசுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி அன்றைய தினத்தில் வேறு சில வழக்குகளில் வாதாட உள்ளார். எனவே வழக்கை வேறு ஒரு தினத்துக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து வழக்கை நவம்பர் 11-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதன்கீழ் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது முடிவெடுக்க ஆளுநர் காலம் தாழ்த்தியதை கணக்கில் கொள்ளவேண்டும். பேரறிவாளனைப் போலவே மீதமுள்ள 6 பேரும் தங்களுக்கான நிவாரணங்களை கேட்க தகுதி உடையவர்கள்” என தெரிவித்தனர்.

இதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசத்தில் இருந்த நளினி, ராபர்ட் பயாஸ், முருகன், சாந்தன், ரவி, ஜெயக்குமார் என அனைவரும் விடுதலை ஆகின்றனர். முன்னதாக கடந்த மே மாதம் இவ்வழக்கில் கைதாகியிருந்த மற்றொருவரான பேரறிவாளன் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பேரறிவாளன் விடுதலை குறித்த செய்திகளை இங்கு அறிக: