மும்பையின் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு வந்த மின்னஞ்சல் தொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள், உளவுத்துறை விசாரணை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாசகங்களுடன் வந்த மின்னஞ்சல் ஆகஸ்ட் 8 ம் தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது.
பிரதமரை அச்சுறுத்தும் வகையில் உள்ள மின்னஞ்சலை சுட்டிக்காட்டி பிரதமரின் பாதுகாப்புக் குழுவிற்கு தேசிய புலனாய்வு முகமை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இதுபற்றி டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
சில அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கும் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அந்த மின்னஞ்சல்களுடன் விளக்கக் குறிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான சிறப்பு பாதுகாப்புக் குழுவின் கவனத்திற்கு இந்த மின்னஞ்சல் தொடர்பான தகவல்களை தேசிய புலனாய்வு முகமை அளித்துள்ளது.