உ.பி முகநூல்
இந்தியா

உ.பி|இடிக்கப்பட்ட வீடு.. புத்தகங்களை காப்பாற்ற ஓடிய சிறுமி; அகிலேஷ் யாதவ் கொடுத்த வாக்குறுதி!

உத்தரப் பிரதேசத்தில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது தனது புத்தகத்தை பத்திரப்படுத்திக் கொண்டு ஓடியச் சிறுமியின் கல்விக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரின் அராய் கிராமத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக மாநில அரசின் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 21 ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது, புல்டோசர் கொண்டு குடிசை வீடுகள் இடிக்கப்பட்டபோது, அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமியின் வீடும் இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தின்போது ஒரு வீடு தீப்பிடித்தநிலையில், அனன்யா தனது குடிசை வீட்டை நோக்கி ஓடிச் சென்று தனது புத்தகங்களை எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். இந்த காணொளி அனைவரின் கவனத்தையும் பெற்றது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு புதன்கிழமை இந்த வழக்கை விசாரித்தனர். இந்த வீடியோ ஒவ்வொருவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதி புயான் கூறுகையில், ’’புல்டோசர்களால் சிறிய குடிசைகள் இடிக்கப்படும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இடிக்கப்பட்ட ஒரு குடிசையிலிருந்து ஒரு சிறுமி கையில் புத்தகங்களுடன் ஓடி வருவது ஒவ்வொருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றும், குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குபவர்கள் உண்மையில் வீடற்றவர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்தனர். இந்நிலையில், அந்த சிறுமிக்கு கல்வி நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், “ இந்தப் பெண்ணைப் படிக்க வைப்பதாக நாங்கள் உறுதிமொழி எடுக்கிறோம். படிப்பவர்களுக்கு மட்டுமே கல்வியின் மதிப்பு தெரியும். புல்டோசர் என்பது அறிவு, புரிதல் அல்லது ஞானத்தின் சின்னம் அல்ல, அழிவு சக்தியின் சின்னம். ஒரு புல்டோசர் ஆணவம் என்ற எரிபொருளால் இயக்கப்படுகிறது. பெருமையின் சக்கரங்கள் மீதேறி நகர்கிறது. அதில் நீதியின் கடிவாளம் இருப்பதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.